Pages

Monday, February 26, 2024

கஹட்டோவிட்ட மற்றும் குரவலான கிராமங்களில் வசிக்கும் 40 வீதமான குடும்பங்களின் மாதாந்த வருமானம் ரூபா 6,000 இனை விட குறைவு! அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்


கஹட்டோவிட்ட மற்றும் கஹட்டோவிட்ட மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய கஹட்டோவிட்ட கிராமத்திலுள்ள 796 குடும்பங்களில் 322 (40.45%)  குடும்பங்களின் மாதாந்த வருமானம் ரூபா 6,000 விட குறைவு என்று அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 443 குடும்பங்கள் வசிக்கும் குரவலான பிரதேசத்தில் 178 குடும்பங்களின் (40.18%) மாதாந்த வருமானம் ரூபா 6,000 இனை விட குறைவாகும் என்றும் அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டம், அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சில கிராமங்களை தெரிவு செய்து அவற்றில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் தொடர்பிலான தகவல்களை கோரி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (Right To Information - RTI) கீழ் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு எம்மால் அனுப்பப்பட்ட விண்ணப்பத்திற்கு கிடைத்த பதிலில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.



நாம் தகவல் கோரிய கிராமங்கள் : திஹாரிய, கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட, ருக்கஹவில, ஹொரகொல்ல, வல்கம்முல்ல மற்றும் குரவலான

 எமது விண்ணப்பத்தில் குறித்த கிராமங்களின் சனத்தொகை விபரத்தையும் கோரியிருந்தோம். அதனடிப்படையில் எமக்கு கிடைத்த பதிலில் குறித்த கிராமங்களில் பால் வேறுபாடுகளின் அடிப்படையிலான சனத்தொகை, மாதாந்த வருமானங்களின் அடிப்படையில் கிராம சேவகர் பிரிவு வாரியாக குடும்ப எண்ணிக்கை, கிராம சேவகர் பிரிவுகளின் அடிப்படையில் சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை என்பன அட்டவணைப்படுத்தப்பட்ட அடிப்படையில் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

கஹட்டோவிட்ட கிராமத்தை அண்மித்த மேற்படி கிராமங்களுடன் ஒப்பிடும் போது கஹட்டோவிட்ட கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக காணப்படுகின்றமை அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகம் வழங்கிய தகவலில் இருந்து தெளிவாக புலப்படுகிறது. 

இங்கு "குடும்பம்" என்பதன் அர்த்தம் "வீடு" அல்ல என்பதுடன், "வருமானம்" என்பது ஒரு குடும்பத்திற்கு தொழில் ஒன்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தையே குறிக்கின்றது என்பதுடன் ஏனைய வருமானங்கள் (அரச மற்றும் ஏனைய உதவிகள்) கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வசிக்கும் போது அவை தனித்தனி குடும்பங்களாக கணக்கெடுப்பு செய்யப்படும். இந்த நடைமுறையே சமுர்த்தி கொடுப்பனவின் போது பின்பற்றப்படுகிறது.

எமது தகவலறியும் விண்ணப்பத்திற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்படி கிராமங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் தொடர்பில் மாதாந்த வருமானத்தை அடிப்படையாக கொண்ட அட்டவணை கிடைத்துள்ளது. அவற்றில் மிகவும் வருமானம் குறைந்த, அதாவது ரூபா 6,000 இலும் குறைந்த மாதாந்த வருமானம் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களை அடிப்படையாக வைத்து ஆராய்வோம்.

திஹாரிய கிழக்கு, திஹாரிய மேற்கு, பஹல திஹாரிய, திஹாரிய வடக்கு, திஹாரியகம மற்றும் திஹாரிய தெற்கு ஆகிய ஆறு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய திஹாரிய பிரதேசத்தில் மொத்தம் 4,317 குடும்பங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 196 (04.54%) குடும்பங்களின் மாதாந்த வருமானம் ரூபா 6,000 இனை விட குறைவாகும்.

அத்துடன், ஓகொடபொல மற்றும் ஓகொடபொல வடக்கு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஓகொடபொல பிரதேசத்தில் வதியும் 691 குடும்பங்களில் 174 குடும்பங்களினது (25.18%) மாதாந்த வருமானம் ரூபா 6,000 இனை விட குறைவாகும்.

அதேவேளை உடுகொட மற்றும் உடுகொட மேற்கு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய உடுகொட பிரதேசத்தில் 732 குடும்பங்களில் 213 குடும்பங்களின் (29.1%) குடும்பங்களின் மாதாந்த வருமானம் ரூபா 6,000 இனை விட குறைவாகும்.

மேலும் கம்புராகல்ல கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய ருக்கஹவில பிரதேசத்தில் வதியும் 775 குடும்பங்களில் 41 குடும்பங்களினதும் (5.3%), வல்கம்முல்ல பிரதேசத்தில் வதியும் 312 குடும்பங்களில் 80 (25.64%) குடும்பங்களினதும் மாதாந்த வருமானம் ரூபா 6,000 இனை விட குறைவாகும்.

இது தவிர ஹொரகொல்லாகம கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய ஹொரகொல்ல பிரதேசத்தில் வதியும் 516 குடும்பங்களில் 19 (3.7%) குடும்பங்களின் மாதாந்த வருமானம் 6,000 இனை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.




இதேவேளை குரவலான கிராமத்தின் தகவல்கள் எமக்கு பிந்திக்கிடைத்தன. அவற்றினை இத்துடன் இணைக்கின்றோம்.

அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகம் வெளியிட்ட மேற்குறித்த அட்டவணையின் அடிப்படையில் குரவலான கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய குரவலான கிராமத்திலுள்ள 443 குடும்பங்களில் 178 குடும்பங்களின் அதாவது 40.18 வீதமான குடும்பங்களின் மாதாந்த வருமானம் ரூபா 6,000 இனை விட குறைவாகும்.

இவற்றை பார்க்கும் போது ஏனைய பிரதேசங்களை விட கஹட்டோவிட்ட மற்றும் குரவலான‌ பிரதேசங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம்.

உண்மையான தரவுகளில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும். என்றாலும் ஒப்பீட்டு ரீதியில் ஏனைய பிரதேசங்கள் உடன் ஒப்பிடுகையில் கஹட்டோவிட்ட மற்றும் குரவலான பிரதேசங்களில் குறைந்த வருமானம் பெறுவோர் இன் எண்ணிக்கை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. 

இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்துவது அவசியமாகும். 

இது தவிர மேற்குறித்த பிரதேசங்களின் சனத்தொகை மற்றும் சமூர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்பாக கிடைத்த தகவல்களையும் இங்கு தருகிறோம்.






No comments:

Post a Comment

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் (நேரலை)

 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் (நேரலை) Pic - The Sri Lanka