Pages

Thursday, February 29, 2024

"பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பழீல் மௌலானா"

பாலஸ்தீன ஆதரவுப் போராளி ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா...

உலக வரலாற்றில் மிக நீண்ட கால பிரச்சனையாகவும் மிக சிக்கலான பிரச்சினையாகவும் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை விளங்கி வருகிறது. உலக நாடுகளில் வாழும் முஸ்லிம் மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதனைக் காணலாம். இலங்கையிலும் முஸ்லிம்கள் மத்தியில் இன்றைய காலப் பகுதிகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்படுவதை காணலாம். ஆனால்  ஆரம்ப காலங்களில் அதாவது 1940 களின் பிற்பகுதியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு  தெரிவித்து  பாரிய அளவிலானா கூட்டங்கள் , பல சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெற்றது. இதில் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா அவர்களின் சேவைகள் அளப்பரியது. பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்டதால் பழீல் மௌலானா அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்கள்.

அந்த வகையில் பலஸ்தீன் ஆதரவுப் போராளியாக ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா அவர்களின் பங்களிப்பினை நோக்கும் போது   

இலங்கையில் கிலாபத் இயக்கத்தை கலாநிதி ரீ.பி. ஜாயாவே முன்னெடுத்த காலப்பகுதிகளில் கிலாபத்தை ஒழிக்க எடுக்கும் முயற்சிக்கு எதிராக தனது ஆதரவாளர்களின் துணையுடன் அக்காலத்தில் பல கூட்டங்களை அவர் நடத்தினார். 1924ஆம் ஆண்டு உஸ்மானிய கிலாபத் துருக்கியில் வீழ்த்தப்பட்டது. அதன் தொடராக பலஸ்தீனப் பிரச்சினை மேலெழுந்தது.

“பாலஸ்தீன குடிமக்களை அகதிகளாக்கி அவர்களின் தாயகத்தை அபகரித்து இஸ்ரவேலர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அயோக்கியத்தனம் இலங்கை முஸ்லிம்களின் உள்ளத்தைப் பெரிதும் பாதித்தது. ரீ.பி. ஜாயா உட்பட பிரமுகர்கள் பலர் நாடளாவிய ரீதியில் இக்கொடுமை பற்றி மக்களை அறிவுறுத்தினர். தமது எதிர்ப்பைக் காண்பிப்பதற்காக மருதானை ஜீம்மா மஸ்ஜித் முன்றலில் ஒரு பெரும் கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்திற்கு அரசாங்க சபை உறுப்பினராக இருந்த சேர் முஹம்மது மாக்கான் மாக்கார் தலைமை தாங்கினார்.

உலக அரங்கில் முஸ்லிம்களின் நிலை பரிதாபகரமான நிலைக்குச் சென்றிருந்தமையும் பலஸ்தீன் மீது அடர்ந்தேறிக் கொண்டிருந்த தெளிவான அநீதமும் இளைஞன் பழீல் மௌலானாவின் உணர்வுகளைத் தட்டி எழுப்பின. 1947ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற பலஸ்தீன விடுதலை ஸியோனிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பழீல் மௌலானா முன்னிலை வகித்தது மட்டுமன்றி, இதன் விளைவாக பிரித்தானிய பொலிசாரின் தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டார்.

ஸியோனிச எதிர்ப்பு அரசியல் போராட்டங்களை அக்காலத்தில் வழிநடத்திய ரீ.பி. ஜாயா அவர்களே வியக்குமளவு பழீல் மௌலானாவின் செயற்பாடுகள் முனைப்புப் பெற்றிருந்ததை பின்வரும் சம்பவம் மூலம் அறியலாம்:

1946ஆம் ஆண்டில் மாளிகாவத்தையில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு பழீல் மௌலானா நடத்திய ஸியோனிச எதிர்ப்பு இயக்கம் மக்களிடையே ஒருவித பீதியை  உண்டாக்கியது. இது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெறவே டாக்டர் ஜாயாவினால் பழீல் மௌலானா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பழீல் மௌலானாவின் தன் பக்க விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கொழும்பு ஸாஹிராவின் தலைமை ஆசிரியர் ரீ.பி. ஜாயா அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்:

“உங்களின் அரசியல் போக்கு எனக்கு நல்லதெனப்படுகிறது. ஆயினும், மாணவர்களை அரசியல் குட்டைக்குள் இறக்கி சேற்றைப் ”சச் செய்யக் கூடாது என்றார். (எனது டயறிக் குறிப்புகள், பழீல் மௌலானா, 1976)

1971ஆம் ஆண்டு, முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான புனித அல்அக்ஸா !த ஸியோனிச அரசினால் தீயிடப்பட்டதை கண்டித்து மிகப் பிரமாண்டமானதோர் ஊர்வலத்தை மருதமுனையிலிருந்து கல்முனைக்கு பழீல் மௌலானா நடத்திச் சென்றார். சுமார் அரை மைல் நீளமான இந்த ஊர்வலம் இளைஞர்களை உணர்ச்சிக் கொந்தளிப்படையச் செய்து விட்டது. “நாரே தக்பீர் முழக்கம் விண்ணைப் பிளந்தது. மஷீர் மௌலானா உட்பட மருதமுனை வாலிபர்களும் வயது வந்தவர்களும் இந்த ஸியோனிச எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்கு கொண்டனர். கல்முனையிலிருந்தான ஆர்ப்பாட்டத்தை சமூக செயற்பாட்டாளராக விளங்கிய இளைஞர் எம்.எச்.எம். அஷ்ரப் வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது. கல்முனை டவுன் கவுன்சிலில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அதில் பழீல் மௌலானா சிறப்புரை ஆற்றினார். (எனது நினைவுத் திரையில் அஷ்ரப், எஸ்.எச். ஆதம்பாவா, ஆண்டு)

நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள ‘அல்-அக்ஸா’ மகா வித்தியாலயத்தின் பெயர் பழீல் மௌலானா கல்முனை வட்டாரக் கல்வியதிகாரியாக கடமையாற்றிய காலத்தில் சூட்டப்பட்டது என்பது பலஸ்தீன் விடுதலைப் போராட்டம் தொடர்பாக பழீல் மௌலானாவுக்கு இருந்த ஆழ்ந்த ஈடுபாட்டினையும் அப்போராட்டத்தை  மக்கள் மயப்படுத்த வேண்டும் எனும் அவரது சிந்தனையையும் காட்டி நிற்கின்றது. இப்பெயர்சூட்டு விழா பெருவிமர்சையாக நற்பிட்டி முனையில் 1975.04.19 அன்று நடைபெற்றது.

இவ்வாறு உலக முஸ்லிம்களின் அபிலாசைகளுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டு இப்போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பழீல் மௌலானாவிற்கு பெருந்துணிவு இருந்திருக்க வேண்டும். அவரின் இப்போக்கானது இலங்கையை அக்காலத்தில் ஆட்சி; செய்து கொண்டிருந்த காலனித்துவ ஆட்சியாளர்களின் நலன்களுக்கு முரணானவையாக இருந்த போதும் அவற்றைப் பொருட்படுத்தாது பாகிஸ்தான், பலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களில் கலந்து கொண்டு குரல் கொடுத்தமையானது அவரது அபார துணிச்சலையும் தான் சார்ந்த சமூகத்தின் மீதான பற்றையும் இப்போராட்டங்களுக்காக எதனையும் இழக்க தயாராக இருந்த அவரது அர்ப்பண உணர்வையும் வெளிப்படுத்துகின்றது.

முஹமட் அகீல் சிலானா 
B.A.(HONS )  HISTORY ( R)
இலங்கை கிழக்குப்பல்கலைக் கழகம்








No comments:

Post a Comment

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் (நேரலை)

 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் (நேரலை) Pic - The Sri Lanka