- ரிஹ்மி ஹக்கீம் -
கடந்த 2021 ஆம் ஆண்டு நீதிச்சேவை ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட நீதிமன்ற உரைபெயர்ப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
குறித்த பரீட்சையானது கொழும்பில் மாத்திரமே நடைபெற்றது. 2021 இல் நாட்டின் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருக்கும் போது நடைபெற்ற இப்பரீட்சையில் வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மாகாணங்கள் உட்பட கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள பிரதேசங்களில் இருந்தும் பரீட்சார்த்திகள் தோற்றினார்கள்.
பரீட்சார்த்திகள் பலர் தங்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன் வந்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து, விசேட வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கும் சென்று ஐந்து மணி நேர பரீட்சையை பரீட்சார்த்திகள் எழுதியிருந்தனர்.
இவ்வாறு பரீட்சை 2021 இல் நடைபெற்ற போதும் நீண்ட நாட்களாக பெறுபேறுகள் வெளிவராததால் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாம் நீதிச்சேவை ஆணைக்குழுவை தொடர்பு கொண்ட போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் 2023 ஆம் வருடம் ஆரம்பமானதை தொடர்ந்தும் பெறுபேறுகள் வெளியாகவில்லை என்பதால் பெறுபேறுகள் எப்போது வெளிவரும், தாமதத்திற்கான காரணம் என்ன என்று வினவிய போது தெளிவான பதில் எமக்கு கிடைக்கவில்லை.
2023 ஜூன் மாதமாகியும் பெறுபேறுகள் வெளிவராத காரணத்தால் அது தொடர்பில் தகவல் பெறுவதற்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் 2023 ஜூன் 21 ஆம் திகதி விண்ணப்பம் ஒன்றை அனுப்பினோம்.
RTI விண்ணப்பத்திற்கு 14 நாட்களுக்குள் அரச நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும். ஆனால் நீதிச்சேவை ஆணைக்குழு நாம் விண்ணப்பித்து ஒரு மாத காலமாகியும் பதிலளிக்காத காரணத்தால் அதன் தகவல் அதிகாரியை தொடர்பு கொண்டு வினவிய போது எமது விண்ணப்பம் தொடர்பில் இவ்வார இறுதியில் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக ஆணைக்குழு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும் தொடர்ந்தும் பதில் எதுவும் கிடைக்காததால், ஜூலை 31 ஆம் திகதி மேன்முறையீட்டு விண்ணப்பத்தை (RTI 10) நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பினோம்.
அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 03 ஆம் திகதி, எனது விண்ணப்பம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டது.
அதாவது முதலில் அனுப்பிய விண்ணப்பத்திற்கு 14 நாட்களுக்குள் வழங்க வேண்டிய பதில் 44 நாட்களுக்கு பிறகே எமக்கு வழங்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இந்த செப்டம்பர் மாத ஆரம்பத்தில் ஆணைக்குழுவின் தகவல் அதிகாரியை தொடர்பு கொண்ட போது, ஆணைக்குழுவிடம் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் தீர்மானம் ஒன்று எட்டப்படவில்லை எனவும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை எனவும் அதன் காரணமாகவே நியமனங்கள் வழங்கப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஒரு பிரஜையால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் விண்ணப்பங்களுக்கு உரிய காலத்திற்குள் பதிலளிப்பது சகல அரச நிறுவனங்களினதும் கடமையாகும். நாம் அடுத்த கட்டமாக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்ய இருந்தோம் எனவும் தெரிவித்தோம்.
எனினும் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளிவரலாம் எனவும் தகவல் அதிகாரி தெரிவித்தார்.
அதற்கிடையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடமும் எமது கோரிக்கையினை முன்வைத்தோம். எனினும் அவரிடமிருந்து பதில் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (21) முதல் பரீட்சை பெறுபேறுகள் தபால் மூலம் பரீட்சார்த்திகளுக்கு கிடைக்கப்பெற்று வருவதை எம்மால் அறியக்கூடியதாக உள்ளது.
அதனடிப்படையில் சுமார் இரு வருடங்களுக்கு முன்பு நடாத்தப்பட்ட நீதிமன்ற உரைபெயர்ப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
எனினும் மொழிபெயர்ப்பு பாடத்தில் சித்தி பெறுவதற்கு பெற்றுக்கொள்ள வேண்டிய குறைந்த பட்ச புள்ளிகள் மற்றும் வெட்டுப்புள்ளி விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை. எத்தனை பேருக்கு நியமனம் வழங்குவது என்று ஆணைக்குழு தீர்மானம் எடுத்த பின்னர் வெட்டுப்புள்ளி விபரம் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் வெட்டுப்புள்ளி விபரம் வெளிவராமை காரணமாக நியமனம் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.
பெறுபேறுகள் வெளியாகியமை எமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். இது போன்ற பல விடயங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும் என்பதற்கு இது முக்கியவொரு எடுத்துக்காட்டாகும்.
நாட்டில் ஏற்கனவே பல்வேறு திறந்த போட்டிப்பரீட்சைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தாலும் இரு வருடங்களுக்கும் மேலாக சில பரீட்சைகள் நடாத்தப்படவில்லை (உ+ம் : முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தெரிவுக்கான பரீட்சை) என்பதும் கவனிக்கத்தக்க அம்சமாகும்.
அது தொடர்பில் தேவையுடைய தரப்பினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை பயன்படுத்தி உரிய தகவலை கோரலாம். அதன்மூலம் சிறந்தவொரு முடிவு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
உரிமையுடன் தகவல் அறிவோம்
No comments:
Post a Comment